கடவுளுடன் மது அருந்துதல்
நான் ரசித்த கவிதைகளில் ஒன்று யூமா வாசுகியின் படைப்புகளில் ஒன்றான கடவுளுடன் மது அருந்துதல். மிகுந்த தாக்கத்தையும் மது தரும் மகிழ்போதையும் காதல் மடந்தையால் நுகர்ந்துணரும் கிளர்ச்சியூட்டமும் எனக்களித்த கவிதை இதோ:-
கடவுளுடன் மது அருந்துதல்
தன்னந்தனியாக மது விடுதிக்கு வந்தேன் - அங்கே
எனக்கு முன்பாக கடவுள் வந்து காத்திருந்தான்
உறையிலிருந்து வாளை தீரம்மிக்க
அலட்சியத்துடன் உருவுவதாக
திரவத்திலிருந்து வெளிப்பட்டு விட்டது தூய கிறக்கம்
பருக பருக பாதை சம்பவித்த
நீர்வழி நெடும்பயணத்தில்
திறனால் களித்த என் நரம்புகள்
மலைச்சர்ப்பங்களாக திமிறி நெளிந்தன
தான் பெற்ற பிள்ளை எம்முள் கிளர்ந்தேறி விளையாடுவதை
பெருமையோடு பார்த்தபடி
புட்டியில் மிச்சம் இருக்கும் மதுவோடு பேசுவதற்கு
நல்ல பெயர் சூட்டிக் கொள்ள யோசித்தோம் நானும் கடவுளும்.
போதையின் ஒரு முத்தம் குவிந்த மையத்திலிருந்து
விழித்துப் பரவுகிறது
காண்பதன் மீதெல்லாம் பூக்கள் தூவும் பார்வை.
கடவுளின் மகிழ்வை கவனித்தவாறே
பாதி அளவு மது மிச்சம் இருந்த கண்ணாடிக் குவளையில்
நான் தட்டிவிட்ட சிகரெட் சாம்பல்
இரண்டு தங்கமீன்களாகிச் சுழல்கிறது.
கடவுள் குவளையை சிறு தொட்டியாக மாற்றி
அழகிய வீட்டின் மேசையில் வைத்தான்.
என் பங்காக அடுத்து நான் மேசையில் வைத்தது
ஒரு தட்டச்சு எந்திரம்.
கடவுளுக்கு புரிந்து விட்டது போலிருக்கிறது.
ஒரு பெண்ணை அமரச் செய்தான் மேசைக்கு முன்பாக.
அவள் என்ன செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
பெற்ற தனிமையில் மகிழ்ந்து சிரம் தாழ்த்தி
புன்னகையில் இதழ்கள் குவிய
மிக நீண்ட காதல் கடிதத்தைத்
தட்டச்சு செய்யத் தொடங்கினாள் அவள் .
எழுத்துக்கள் பதியும் சப்தங்களைத் தொகுத்து
மதுவாக மாற்றி பருகத் தருகிறான் கடவுள் .
கடல் மீன்களின்
செதில்களை எல்லாம் காகிதங்களாக்கித் தர
விரும்புகின்றன தங்க மீன்கள்!
அவள் எழுதித் தீரும் வரை நாங்கள்
குடிக்கத்தான் வேண்டியிருக்கிறது .
Comments
Post a Comment